Sunday, May 3, 2020

வீண் பேச்சு தவிர்

 ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான் . அவன் எப்பொழுதும் காரணம் இல்லாமல் வளவளவென்று பேசிக் கொண்டிருந்தான் .

 ‘ வீண் பேச்சினால் பயன் ஏதும் விளையாது . நா அடக்கம் வேண்டும் ' என்பதை உணர்த்த விரும்பினான் அமைச்சன் .

ஒரு நாள் , அவர்கள் இருவரும் சோலையில் உலாவிக் கொண்டிருந்தனர் . அப்பொழுது மரத்திலிருந்து குயில் குஞ்சு ஒன்று கீழே விழுந்தது . மேலே பார்த்தான் அரசன் . மரத்தில் பறவைக் கூடு ஒன்று இருந்தது . வியப்பு அடைந்த அவன் ,

“ எதற்காக இந்தக் குயில் குஞ்சை இதன் தாய் கீழே தள்ளி விட்டது ? ' என்று கேட்டான் . வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ந்தான் அமைச்சன் .

“ வீண் பேச்சினால் நிகழ்ந்தது இது . குயில் குஞ்சிற்கு இந்தத் தண்டனை தேவைதான் " என்றான் .

 “ ஒன்றும் புரியவில்லையே , விளக்கமாகச் சொல் " என்று கேட்டான் அரசன் .

" அரசே ! இது குயில் குஞ்சு . அந்தக் கூடு காக்கையின் கூடு . காக்கைக்குத் தெரியாமலேயே அதன் கூட்டில் இந்தக் குயிலின் தாய் தன் முட்டையை இட்டது .

நடந்ததை அறியாத காக்கை இதையும் தன் முட்டை என்றே அடை காத்தது . காக்கைக் குஞ்சுகளுடன் குயில்  குஞ்சும் முட்டையிலிருந்து வெளியே வந்தது . எல்லாம் ஒரே நிறமாக இருந்ததால் குயில் குஞ்சையும் தன் குஞ்சு என்றே உணவு ஊட்டி வந்தது காக்கை " என்றான் அமைச்சன் .

 ' பிறகு ஏன் இந்த குயில் குஞ்சு கூட்டிலிருந்து விரட்டப் பட்டது ? ' ' என்று கேட்டான் அரசன் .

 " இந்தக் குயில் குஞ்சு தேவை இல்லாமல் பேசத் தொடங்கியது . இதன் குரலைக் கேட்டதும் காக்கைக்கு இது தன் குஞ்சு அல்ல என்ற உண்மை தெரிந்தது . உடனே கூட்டைவிட்டு இதைத் தள்ளி விட்டது . யாராக இருந்தாலும் வீண் பேச்சு துன்பத்தைத்தான் தரும் ' ' என்றான் அமைச்சன் . '

 தனக்காகத்தான் இந்தக் குயில் குஞ்சின் கதையைச் சொல்லி இருக்கிறான் அமைச்சன் ' என்பதை உணர்ந்தான் அரசன் . அன்றிலிருந்து வீண் பேச்சுப் பேசுவதை அவன் குறைத்துக் கொண்டான் .

No comments:

Post a Comment

உவந்து அளிப்பதே உயர்ந்தது

முன்னொரு காலத்தில் புகழ் பெற்ற இசுலாமியத் துறவியாக ஜலால் என்பவர் விளங்கினார் . அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர் . அரசர்கள் பலரும் அவரை வணங...