Sunday, May 3, 2020

உவந்து அளிப்பதே உயர்ந்தது

முன்னொரு காலத்தில் புகழ் பெற்ற இசுலாமியத் துறவியாக ஜலால் என்பவர் விளங்கினார் . அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர் . அரசர்கள் பலரும் அவரை வணங்கி விலை உயர்ந்த பொருள்களைக் காணிக்கையாகத் தந்தனர் .

ஒரு நாள் , ஏழை உழவர்கள் இரண்டு பேர் துறவியைக் காண வந்தனர் . அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள் .

பின்னர்  தாங்கள் உண்பதற்காக வைத்திருந்த கூழைக் காணிக்கைப் பொருளாகத் தந்தார்கள் . மகிழ்ச்சியுடன் அதை வாங்கிய அவர் அந்தக் கூழைக் குடித்தார் . அவர்களும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றனர் .


மீதி இருந்த கூழைத் தம் சீடர்களுக்குக் கொடுத்தார் அவர் . ' எவ்வளவு விலை உயர்ந்த பொருள்கள் நம் குருவிற்குக் காணிக்கையாக வந்துள்ளன . கூழைக் காணிக்கையாகத் தர இவர்களுக்கு எப்படி மனம் வந்தது ' என்று அதை அருவருப்புடன் பார்த்தார்கள் சீடர்கள் .

அவர்களின் மனநிலையை அறிந்த அவர் ,

' ' சீடர்களே ! நாம் நாளும் வணங்கி வழிபடும் இறை தூதர் நபிகள் நாயகம் ஆவார் . எதிரி நாட்டின் மீது படையெடுப்பதற்காக அவருக்குப் பெரும்பொருள் தேவைப்பட்டது . இதை அறிந்த பலர் தங்கள் சொத்துகளில் பாதியை விற்றுப் பணம் தந்தார்கள் .

அபுபக்கர் தன்னிடம் இருந்த எல்லாப் பொருள்களையும் நபிகள் நாயகத்திடம் தந்தார் . இப்படியே ஏராளமான பணம் சேர்ந்தது .

ஏழைக் கிழவி ஒருத்தி , தன் கையில் இருந்த நான்கு பேரீச்சம் பழங்களையும் சிறு ரொட்டியையும் காணிக்கையாக அவரிடம் தந்தாள்.

எளிமையான அந்தக் காணிக்கைப் பொருளைப் பார்த்து அங்கிருந்த பலர் சிரித்து விட்டனர் .

அவர்களைப் பார்த்து நபிகள் நாயகம் , ' நான் சற்று நேரத்திற்கு முன் ஒரு கனவு கண்டேன் . இங்கு காணிக்கையாக வந்த எல்லாப் பொருளையும் ஒரு தட்டில் வைத்தனர் . இன்னொரு தட்டில் நான்கு பேரீச்சம் பழங்களை வைத்தனர் . பேரீச்சம் பழங்கள் இருந்த தட்டே தாழ்ந்து கிடந்தது . எதிர்த் தட்டில் மேலும் மேலும் பொருள்களை வைத்தும் அந்தத் தட்டு சிறிதும் உயரவில்லை .

இதிலிருந்து என்ன தெரிகிறது ? அன்புடன் தரப்படும் காணிக்கைப் பொருள் சிறிதாயினும் விலை உயாத பொருள்களை விட மதிப்பில் உயர்ந்தது . 

"நாம் பொருளைப்பார்க்கக் கூடாது . தந்தவர் உள்ளத்தைப் பார்க்க வேண்டும்'' என்றார் .

தங்கள் செயலுக்கு வருந்திய அவர்கள் நபிகள் நாயகத்திடம் மன்னிப்பு வேண்டினார்கள் ' ' என்றார்

கடினமானதையே செய்க

ஓர் ஊரில் முரட்டுச் சிறுவன் ஒருவன் இருந்தான் . அவனிடம் முன் கோபம் அதிகமாக இருந்தது . அவன் வெளியே சென்றால் போதும் யாருடனாவது சண்டை போடாமல் வீடு திரும்ப மாட்டான் .

 ஒருநாள் அவனுடைய  வீட்டிற்குப் பெரியவர் ஒருவர் வந்தார் . அவரிடம் அவன் பெற்றோர்கள் தங்கள் மகனின் முரட்டுத்தனத்தைப் பற்றிச் சொன்னார்கள் . அப்பொழுதுதான் அவனும் எவனுடனோ சண்டை போட்டுக் கிழிந்த சட்டையுடன் வீட்டிற்கு வந்தான் .

அவனை அன்புடன் அழைத்த பெரியவர் , ' ' நான் ஒரு கேள்வி கேட்கிறேன் , அதற்குப் பதில் சொல்கிறாயா ? ' ' என்று கேட்டார் .

“ சொல்கிறேன் ' ' என்றான் அவன் .

' ' உன்னைப் போல வலிமையான பையன் பிறர் கூறும் கேலிகளைப் பொறுத்துக் கொள்வானா ? அல்லது பதிலுக்குக் கிண்டல் செய்வானா ?

பிறர் தன்னை அடித்த உடன் மீண்டும் அவர்களை அடிப்பானா ? அல்லது அமைதியாக வந்து விடுவானா ? ' ' என்று கேட்டார் .

" இது என்ன கேள்வி ?

பிறர் ஒரு திட்டு திட்டினால் பதிலுக்குப் பத்துத் திட்டு திட்டுவான் .

ஒரு அடி அடித்தால் பத்து அடி அடிப்பான் . என்று கூறினான் அந்த சிறுவன்

" கேலிக்குக் கேலி பேசுவது . அடிக்குப் பதிலடி தருவது கடினமான செயலா ? அல்லது அந்தச் சூழலில் பொறுமையாக இருப்பது கடினமா ? ' '  என்று கேட்டார் அந்த பெரியவர்.

பொறுமையாக இருப்பதுதான் கடினமான செயல் ' ' என்று தயக்கத்துடன் சொன்னான் அவன் .


உன்னைப் போன்று வலிமை உடையவர்கள் கடினமான செயல்தானே செய்ய வேண்டும் . அப்பொழுதுதானே பெருமை பெற முடியும் .

இனி யாராவது உன்னை அடித்தாலோ கேலி செய்தாலோ பொறுமையைக் கடைப்பிடி " என்று அறிவுரை சொன்னார் அவர் .

 சில மாதங்கள் கழித்து மீண்டும் அவர் அந்த வீட்டுக்கு வந்தார் . அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் சிறுவன் .

“ ஐயா ! நீங்கள் சொன்னபடியே கடினமான செயல் செய்து வருகிறேன் . யார் என்னைக் கேலி செய்தாலும் அடித்தாலும் பொறுத்துக் கொள்கிறேன் . இப்பொழுது எல்லோரும் என்னைப் பாராட்டுகின்றனர் ' ' என்று பெருமையுடன் சொன்னான் .

பெருந்தன்மை கொடுத்த நன்மை

முன்னொரு காலத்தில் சீன நாட்டின் ஒரு பகுதியை சிங்காய் என்ற அரசன் ஆண்டு வந்தான் .

பக்கத்து நாட்டைக் கைப்பற்ற கருதினான் அவன் . பெரும்படை , திரட்டிக் கொண்டு அந்த நாட்டை நோக்கிப் புறப்பட்டான் . குதிரையில் அங்கு வந்த ஒற்றன் ,

' ' அரசே ! நல்ல செய்தி . உங்கள் பகைவனான பக்கத்து நாட்டு அரசன் திடீரென்று இறந்து விட்டான் . நாடே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது . இப்பொழுது நாம் தாக்கினால் அந்த நாட்டை எளிதாகக் கைப்பற்றி விடலாம் . எதிர்ப்பே இராது ' ' என்றான் .

தன் படைத் தலைவர்களை அழைத்த அரசன் ,

" பக்கத்து நாடு அரசனை இழந்த சோகத்தில் உள்ளது , இந்தச் சூழலில் போர் தொடுப்பது முறையாகாது . நம் வீரர்களுடன் நாடு திரும்புங்கள் ' ' என்று கட்டளை இட்டான் .

பக்கத்து நாட்டு மக்கள் நடந்ததை அறிந்தனர் . எல்லோரும் ஒன்று கூடிப் பேசினார்கள் . அவர்களில் ஒருவர் . " சோகத்தில் இருக்கும் நம்மை அந்த அரசர் தாக்கவில்லை . அவரைப் போலப் பெருந்தன்மை மிக்கவர் யார் இருக்கின்றனர் ? அவர் செயலைப் பாராட்டி அவரையே நம் நாட்டிற்கும் அரசர் ஆக்குவோம் ' ' என்றார் .

எல்லோரும் அவர் கருத்தை ஏற்றுக் கொண்டனர் .

ஒரு நல்ல நாளில் சிங்காய் அந்த நாட்டிற்கும் அரசன் ஆனான் .

எப்பொழுதும் எதுவும் நடக்கலாம்

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வரதன் என்ற கொடிய அரசன் ஆண்டு வந்தான். அவன் தன் அரண்மனையில் பெரிய திராட்சைத் தோட்டம் ஒன்றை அமைக்க முயற்சி செய்தான்.

அதற்காகத் தன் அடிமைகளை எல்லாம் கடுமையாக வேலை வாங்கினான். அவன் அடிமைகளில் முதியவனான ஒருவனுக்கு எதிர் காலத்தைச் சொல்லும் ஆற்றல் இருந்தது .

 "இந்தத் திராட்சைத் தோட்டத்திலிருந்து ஒரு கிண்ணம் பழச் சாற்றைக் கூட அரசன் சுவைக்க முடியாது . அதற்குள் அவன் இறந்து விடுவான் " என்றான் அவன் .

இதைக் கேள்விப்பட்ட அரசன் கோபம் கொண்டான் . தோட்டத்தில் திராட்சை குலை குலையாக நன்கு பழுத்தது . அரசன் குடிப்பதற்காக அதிலிருந்து ஒரு கிண்ணம் பழச் சாறு அரண்மனைக்கு வந்தது .

கிண்ணத்தைக் கையில் வாங்கினான் அரசன் . தன் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லிய அந்த அடிமையை அங்கு வரவழைத்தான் .

'' ஏ ! அடிமையே உனக்கு என்ன ஆணவம் ?

ஒரு கிண்ணம் பழச் சாறு பருகுவதற்குள் நான் இறந்து விடுவேன் என்றாயே ?

இப்பொழுது என்ன சொல்கிறாய் ?

'' என்று கிண்ணத்தைக் காட்டிக் கேட்டான் அரசன்.

"இந்தப் பழச் சாற்றை நீங்கள் குடிப்பதற்கு முன் எதுவும் நடக்கலாம் " என்றான் அந்த அடிமை .
 
அப்பொழுது அங்கு ஓடி வந்தான் வீரன் ஒருவன் .

" அரசே ! திராட்சைத் தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்து விட்டது . அது தோட்டத்தையே பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது ' ' என்று அலறினான் .

  "அப்படியா ? " என்ற அரசன் பழச் சாற்றுக் கிண்ணத்தை அங்கேயே வைத்தான், ஈட்டியை எடுத்துக் கொண்டு திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றான் . அங்கே பதுங்கியிருந்த கரடி அரசன் மேல் பாய்ந்து அவனைக் கொன்று போட்டது .

அந்த அடிமை சொல்லியபடியே நடந்துவிட்டது.

கவலை இல்லாதார் யாரும் இல்லை

சிங்கம் ஒன்று ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது.

அது ஒரு நாள், என்ன வலிமை எனக்கு இருந்து என்ன பயன் ?
கூர்மையான நகங்களும் எஃகுப் போன்ற பற்களும் இருந்தும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையே ?
சேவல் கூவுவதைக் கேட்டு அச்சமும் நடுக்கமும் கொள்கிறேனே ?

இப்படி வாழ்வது ஒரு வாழ்க்கையா? ' என்று அலுத்துக் கொண்டது.

அப்பொழுது முறம் போன்ற தன் பெரிய காதுகளை ஆட்டியபடியே யானை ஒன்று அங்கே வந்தது .

" எதற்காக உன் காதுகளை எப்பொழுதும் ஆட்டிக் கொண்டே நடக்கிறாய் ' ' என்று கேட்டது சிங்கம் .

" என் காதுக்குள் எறும்பு நுழைந்து கடித்தால் போதும். என் உயிரே போய் விடும்.

அதற்குப் பயந்துதான் எப்பொழுதும் காதை ஆட்டிக் கொண்டே நடக்கிறேன் '' என்றது யானை .

'இவ்வளவு பெரிய உருவம் கொண்ட  யானையே சிறிய எறும்பிற்குப் பயப்படுகிறதே. நம் நிலை எவ்வளவோ பரவாயில்லை ' என்று மகிழ்ந்தது சிங்கம் .

பொய்யாமை நன்று !

ஐந்து வயது மகன் தன் தாயும் தந்தையும் வெளியே செல்வதைப் பார்த்தான் .

" மகனே ! நாங்கள் சந்தைக்குப் போகிறோம் . அவ்வளவு தூரம் உன்னால் நடந்து வர முடியாது . நீ அழாமல் வீட்டிலேயே இரு . திரும்பி வந்ததும் உனக்குப் பிடித்த இனிப்பு செய்து தருகிறேன் ' ' என்றாள் அவன் தாய் .

" நான் வீட்டிலேயே இருக்கிறேன் ' ' என்றான் அவன் .

சந்தைக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொண்டு இருவரும் வீடு திரும்பினார்கள் .

" நம் மகன் சாப்பிடுவதற்கு இனிப்பு செய்  ' ' என்றான் கணவன் .

அதற்கு அவன் தாய் " நான் விளையாட்டுக்குச் சொன்னேன் . அதனால்தான் நம் மகன் அடம் பிடிக்காமல் வீட்டிலேயே இருந்தான் " என்றாள் .

“ சின்னப் பையனை இப்படி ஏமாற்றலாமா ? அவனுக்கு என்ன தெரியும் ? பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோமோ அதை அப்படியே பின்பற்றுவான் .

நீ இப்பொழுது அவனை ஏமாற்றினால் அவனுக்குப் பொய் சொல்லக் கற்றுக் கொடுத்தவள் ஆவாய் .

எந்தச் சூழலிலும் எதற்காகவும் பொய் சொல்லக் கூடாது என கற்றுத்தர வேண்டிய  நாமே பொய் பேசினால் எதிர்காலத்தில் நம் மகன் நல்லவனாக இருக்க மாட்டான் ' ' என்றான் கணவன் .

தன் தவற்றை உணர்ந்த அவள் தன் மகனுக்கு இனிப்பு செய்து கொடுத்தால்.

நல்லவர் தொடர்பு நன்மை தரும்

ஓர் அரசனின் அரண்மனை தோட்டத்தில் அருமையான மா மரம் ஒன்று இருந்தது . அது மிக இனிப்பான பழங்களைத் தந்தது .

அதன் பழங்களைப் பல நாட்டு அரசர்களுக்கும் அன்பளிப்பாக அனுப்பி வைத்தான் அவன் .

' இதைப் போன்ற சுவையான பழத்தை நாங்கள் சாப்பிட்டதே இல்லை . இப்படியே ஆண்டுதோறும் அனுப்பி வையுங்கள் . நம் நட்பு தொடரும் ' என்று எல்லா அரசர்களும் கடிதம் எழுதினார்கள் .

இதனால் மகிழ்ந்தான் அரசன் .

 புகழ் பெற்ற அறிஞர் ஒருவர் அரசவைக்கு வந்தார் . " அரசே ! நீங்கள் யாராலுமே செய்ய இயலாத அரிய செயல் என்று எதைக் கருதுகிறீர்கள் ' என்று கேட்டார் .


' ' அரண்மனை தோட்டத்து மா மரம் மிக இனிப்பான பழங்களைத் தருகிறது . அது கசப்பான பழங்களைத் தருமானால் அதையே அரிய செயலாகக் கருதுவேன் ' ' என்று பெருமையுடன் சொன்னான் அரசன் .

அதற்கு அறிஞர் , " அரசே ! நீங்கள் சொயது அரிய செயலே அல்ல ; எளிய செயலே . அரண்மனை தோட்டத்தை என் பொறுப்பில் விடுங்கள் . மூன்றாண்டுகளுக்குள் அந்த மா மரம் கசப்பான பழங்களைத் தருமாறு செய்கிறேன் " என்றார் .

அரசனால் நம்ப முடியவில்லை . " இன்றிலிருந்து மூன்றாண்டுகள் அரண்மனை தோட்டம் உங்கள் பொறுப்பில் இருக்கும் . அதற்குள் நீங்கள் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் . இல்லாவிட்டால் உங்கள் உடலில் உயிர் இருக்காது ' ' என்றான் அவன் .

மூன்றாண்டுகள் கழிந்தன . அரசவைக்குக் கூடை நிறைய மாம்பழங்களை கொண்டு வந்தார் அறிஞர் .

" அரசே ! நீங்கள் சொன்ன மரத்தில் விளைந்த பழங்கள் தாம் இவை . சுவைத்துப் பாருங்கள் ' ' என்று நீட்டினார் .

அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்துக் கடித்தான் அரசன் . அதன் கசப்பு தாங்காமல் துப்பினான் . வியப்பு அடைந்த அவன் ,

 ' ' அறிஞரே ! நீங்கள் தந்த பழங்கள் என் மா மரத்தின் பழங்களே , என்ன மாயம் செய்தீர் ? எப்படி அதன் சுவையை உங்களால் கசப்பாக்க முடிந்தது ? ' ' என்று கேட்டான் .

' ' அரசே ! அந்த மா மரத்தைச் சுற்றிக் கசப்புச் சுவையுடைய செடி கொடிகளை நட்டேன் . அவையே அந்த மரத்தின் வேர்களிலும் இலைகளிலும் படர்ந்தன . சுற்றுச் சூழல் கசப்பாக இருந்ததனால் அந்த மரத்தின் பழமும் கசக்கிறது .

 தீயவர் தொடர்பினால் நல்லவரும் தீயவராவது போல ' ' என்றார் அறிஞர் .' '

என் மா மரம் பழையபடி சுவையான பழங்கள் தர வழியே இல்லையா ? ' என்று வருத்தத்துடன் கேட்டான் அவன் . ' '

அந்த மா மரத்தின் சுற்றுச் சூழலை மீண்டும் நல்லதாக ஆக்குங்கள் . மூன்றாண்டுகளில் நல்ல சுவையான பழங்கள் தரும் ' ' என்றார் அவர் .

மகிழ்ந்த அரசன் அவருக்கு நிறைய பரிசுகள் தந்து அனுப்பி வைத்தான் .

உவந்து அளிப்பதே உயர்ந்தது

முன்னொரு காலத்தில் புகழ் பெற்ற இசுலாமியத் துறவியாக ஜலால் என்பவர் விளங்கினார் . அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர் . அரசர்கள் பலரும் அவரை வணங...